கள்ளக்குறிச்சி வன்முறை வழக்கு: மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி1011861810


கள்ளக்குறிச்சி வன்முறை வழக்கு: மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி


சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் பள்ளியில் மிகப் பெரிய வன்முறை நடந்தது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

ஆனால் இவ்வழக்கில் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்; நடந்த சம்பவம் என்ன என்பது தெரியாமலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வழக்கமான பணிகளுக்கு சென்றவர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் கிராம பொதுமக்கள் சென்னைக்கு வந்து டிஜிபி அலுவலகத்தில் இது தொடர்பாகவும் புகார் மனுவும் கொடுத்திருந்தனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அப்பாவிகள் கைது செய்யபப்ட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி வழக்கில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்படு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்ர்.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இழப்பீடு கோரிக்கையுடன் உள்ள வழக்கை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது என்பதால், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Comments

Popular posts from this blog