பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு : முதல்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு : முதல்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
எஸ்.பி.எஸ்., நகர்:உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்துக்கும், மணிப்பூரில் முதல்வர் பீரேன் சிங்கிற்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்க, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியை அவர்கள் இருவரும் டில்லியில் சந்தித்து பேசினர்
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வராக, ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பதவியேற்றார். பஞ்சாபில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 இடங்களில் அக்கட்சி 92 இடங்களை கைப்பற்றியது. துரி தொகுதியில் வெற்றி பெற்ற பகவந்த் மான், 48, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களால் சட்டசபை குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் லோக்சபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக ஊரான கட்கர் கலன் கிராமத்தில், நேற்று புதிய அரசின் பதவிஏற்பு விழா நடந்தது. முதலில் 12:30 மணிக்கு துவங்குவதாக இருந்த விழா, சில காரணங்களால் ஒரு மணி நேரம் தாமதமானது.இதில், பஞ்சாபின் 17வது முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். அவருக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, டில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பகத் சிங்கின் நினைவாக மஞ்சள் நிற தலைப்பாகையை அணிந்து பங்கேற்றனர்.
பதவியேற்பு விழாவுக்குப் பின், முதல்வர் பகவந்த் மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் வேலையின்மை, ஊழல், விவசாயிகளின் அவலநிலை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, என் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். அந்த பணிகள் இன்றே துவங்கும். டில்லியில் ஆம் ஆத்மி அரசு செய்தது போல், பஞ்சாபில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தரமும் மேம்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பகவந்த் மானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment